மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அரசுப் பள்ளி மாணவர்கள்: பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள் பாராட்டு!!


ஆம்பூர்,செப்.13.வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சண்முகசுந்தரம் அவர்கள் கடந்த செப்டம்பர் 2 அன்று உலகளவில் சிந்தியுங்கள்,உள்ளூரில் செயல்படுங்கள் என்று எளிய முறையில் மழைநீர் சேகரிப்பது எப்படி  என்று எட்டு பக்க அளவிலான விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டிருந்தார்.

இந்தக் கையேடானது ஆம்பூர் அருகே உள்ள பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.இந்த கையேட்டை படித்து பார்த்த மாணவர்கள் எளிய முறையில் மழைநீரை சேமிப்பது எப்படி என்று தெரிந்து கொண்டனர்.பின்னர் அந்த மாணவர்கள் தாங்கள் தெரிந்து கொண்டதை பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என முடிவு செய்து இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் பணியை மேற்கொண்டார்கள்.

இதன் ஒருபகுதியாக வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சண்முகசுந்தரம் அவர்கள் வெளியிட்ட மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கையேட்டினை பிரதி எடுத்து பொதுமக்களுக்கு வழங்கி மழைநீர் சேமிப்பின் அவசியத்தை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.மேலும் ஓட்டு வீடுகளிலும்,கான்கீரிட் தள வீடுகளிலும் எளிய முறையில் மழைநீர் சேகரிப்பை ஏற்படுத்துவது குறித்தும் விளக்கினர்.பின்னர் மழைநீர் உயிர் என்றும்,மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு மாணவ,மாணவியர்கள் பேரணி சென்றவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் மரக்கன்றுகளை வழங்கி மரங்களை நட்டு பராமரிக்க கூறிச் சென்றனர்.

இவ்வாறு விழிப்புணர்வு செயலில் ஈடுபட்டு வரும் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர்களை பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிகழ்வில் மாணவர்களோடு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோ. சத்திய குமார்,ஆசிரியர்கள் அமர்நாத்,சரவணன்,ஜெயசீலன்,சரண்யா, விநோதா பாய்,சங்கீதா, பர்சியா,காந்தரூபன்,ஜெயபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பள்ளி மாணவ,மாணவியர்கள் கூறியதாவது:தினமும் எங்கள் பள்ளிக்கு  செய்தித்தாள் வரும்.அதில் உலகளவில் சிந்தியுங்கள் ,உள்ளூரில் செயல்படுங்கள் என்று(THINK GLOBALLY ACT LOCALLY)
மழைநீரை சேகரிக்க ஆக்கபூர்வமான பங்களிப்பை நாமே செய்வோம் என்ற எட்டு பக்க அளவிலான கையேடு ஒன்றில்  வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சண்முகசுந்தரம்  அவர்கள் எழுதிய கட்டுரைகளை மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் படித்துப் பார்த்தோம்.
பிறகு நாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக பொதுமக்களிடையே இது சார்ந்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால்  நீர் சேமிப்பின் அவசியத்தையும், நீர்  சிக்கனமாக பயன்படுத்துவது  எவ்வாறு என்பது பற்றியும் ,வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்பது பற்றி
எங்களது பகுதியில் உள்ள பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணினோம்.அதன் ஒருபகுதியாக வீட்டிற்கு ஒரு மரம் வளருங்கள் என கூறி மரங்களை கொடுத்தோம்.பின்னர் மழை நீரை  சேமிப்பதன் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீரும்  விவசாய தேவைக்கு ஏற்ப தண்ணீர்  தேவையான அளவு கிடைக்கும் என்பதை பொதுமக்களிடம் எடுத்துக் கூறினோம்.மழை நீர்  சேகரிப்பை ஓட்டு வாடுகளில் எப்படி ஏற்படுத்துவது என்றும்,கான்கீரிட் தள வீடுகளில் எப்படி ஏற்படுத்துவது என்று விளக்கினோம். எங்களது ஆசையெல்லாம் எங்களது  கிராமத்தில் மழைநீர் சேகரிப்பில்  ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வேலூர் மாவட்டத்தில் முன்னோடி மாவட்டமாக இடம் பெறச் செய்வதே என்றனர் ..

















Post a Comment

0 Comments